03 April 2012

தெய்வீகப் பொன்மொழிகள் - 92


கடவுள் நமக்கு அருள் புரிந்து நம்மைத் தம்மிடம் சேர்த்துக்கொள்ள வேண்டுமென்றால், நாம் அவருக்கும், உலகத்துக்கும் செய்யவேண்டிய 
கடமைகளைத் தவறாமல் செய்யவேண்டும்.  இவைதான் நம்முடைய தருமம்.  நாம் செய்யும் காரியங்கள் இம்மைக்கும், மறுமைக்கும் பயன் 
அளிப்பவையாக இருந்தால் அது தருமம் எனப்படும்.  மறைந்தபின் உய்வு பெற தரும வழிகளிலான கடமைகளைச் செய்ய வேண்டும்.  
மற்றவர்களின் நலனுக்காக் நாம் இன்ஸ்யூரன்ஸ் சேய்வதைவிட இது முக்கியமானது.  தரும காரியங்கள் அவைகளைச் செய்பவரின் 
மறுமை நலனுக்கு இன்ஸ்யூரன்ஸ் போலாகும்.  

தெய்வீகப் பொன்மொழிகள் - 91

ஒரு பிரயாணி ஸ்டேஷனில் வந்து இறங்கியதும் குதிரை வண்டிக்காரர்களும், ஆட்டோ ஓட்டுபவர்களும், டாக்ஸிக்காரர்களும் அவனை சூழ்ந்து கொள்கிறார்கள்.  அவன் தனக்கு எது வேண்டுமோ அதில் ஏறிக்கொண்டு தன்னுடைய இடத்தை அடைகிறான்.  வெவ்வேறு விதமான 
வண்டிக்காரர்கள் சவாரிக்காக போட்டியிடுவதை ஒரு குற்றமாக கருத முடியாது.  அது அவர்களுடைய ஜீவனம்.  ஆனால், வெவ்வேறு மதங்களைக் கைப்டிப்பவர்கள் போட்டியிட்டுக்கொண்டு ஒருவரைத் தங்கள் மதத்தின் மூலமே உய்விக்க முடியுமென்று முயற்சிப்பது அர்த்தமற்றது.  

18 February 2012

தெய்வீகப் பொன்மொழிகள் - 90
தற்கால வசதியான வாழ்க்கையை வேண்டுகிறோம்.  அதற்குப் பணம் தேவைப்படுகிறது.  நாம் எல்லோருமே செல்வந்தராகி விடுகிறோம் என்று வைத்துக்கொள்வோம். நாம் நிம் மதியாகவும், பயமின்றியும் வாழ அது உதவுமா ?  ஒருவருக்கு எவ்வளவு செல்வங்கள் குவிந்தாலும், மற்றவரைவிட
அதிகம் வேண்டுமென்று விரும்புவதால், போட்டியும், சச்சரவும் உண்டாகின்றன.  மற்றவரைவிட அதிகம் பெறவிரும்புவது மனித இயல்பு.  ஒரு வஸ்து எல்லோருக்கும் ஒரு இடத்தில் வழங்கப்பட்டாலும் அதை முந்திப் பெறுவதற்கு போட்டி ஏற்படுகிறது.  இத்தகைய போட்டி மனப்பான்மை
நிலவும் வரை மனதில் திருப்தி எப்படி ஏற்படும் ?  பொருளாதார ரீதியிலான நன்மைகள் மட்டும் போட்டியைக் குறைத்துவிடாது.  போட்டி மனப்பான்மையை முற்றிலும் ஒழிக்க நம்மைத் தவிர நாம் அடையக்கூடிய மற்றொரு வஸ்து இல்லை என்ற ஞானத்தைப் பெறவேண்டும்.  அப்போதுதான் நிம்மதியாக வாழ முடியும்.

தெய்வீகப் பொன்மொழிகள் - 89கல்வித்துறையிலும், சமூக வாழ்க்கையிலும் உள்ள நடைமுறைப் போக்கு எதிர்கால சந்ததியில் வரும் குழந்தைகள் நம்முடைய மத மரபுகளை மனதில் கொள்வார்களா என்று அச்சமளிக்கிறது.  ஒரு குழந்தையின் மனதில் பக்தி என்ற விதையைப் போட்டு விட்டால், அது என்றாவது ஒரு நாள் நிச்சயம் முளைத்து விடும்.  அவர்கள் கல்வி பயிலும் காலத்தில் பக்தி நூல்களை அவர்களுக்குப் பழக்கப்படுத்திவிட்டால் பக்தி என்ற விதை அவர்களுடைய மனதில் ஆழப்பதிந்துவிடும்.  

24 December 2011

தெய்வீகப் பொன்மொழிகள் - 88


                       காஞ்சி மஹான்

நம்முடைய சந்தேகங்களுக்கு வேத சாஸ்திரங்களிலிருந்து விளக்கம் கிடைக்கவில்லை எனில், சாஸ்திரம் அறிந்து அதன்படி நடக்கும் பெரியோர்களின் வழியை நாமும் பின்பற்றவேண்டும்.  அத்தகைய வழிகாட்டுதல் கிடைக்காவிடில் ஆசையையும், அகங்காரத்தையும் வென்று தூய உள்ளம் கொண்ட நல்லவர்கள் வழியில் நாம் செல்ல வேண்டும்.  இதுவும் இல்லையெனில், நாம் நம்முடைய மனசாட்சியின்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்று சாஸ்திரம் அறிவுறுத்துகிறது.   

தெய்வீகப் பொன்மொழிகள் - 87
மஹா பெரியவா


கெட்ட எண்ணங்களாலும், தகாத ஆசைகளாலும் கோபம் போன்ற தீவிர உணர்ச்சிகளாலும் நாம் விழித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு நேரமும் நம் மனம் அசுத்தமடைகிறது.  நம் மனதை தினமும் சுத்தப்படுத்த வேண்டியது நம் கடமை.  இதனால் மன அழுக்குகள் மேன்மேலும் சேராமலிருக்கும்.  சித்த மலத்தைக் கழுவ வல்ல ஒரே நீர் தியானம்.

தெய்வீகப் பொன்மொழிகள் - 86

               நடமாடும் தெய்வம்
சமநிலையில் உள்ளவர்களுக்கிடையே காணும் அன்புதான்.  நட்பு, கடவுளிடமும், மேல் மட்டத்தில் உள்ளவர்களிடமும் காட்டும் அன்பு.  பக்தி நமக்குக் கீழ்ப்பட்டவரிடம் காட்டும் அன்பு க்ருபை எனப்படும்.  எல்லோரிடமும் அன்பு என்னும் அஸ்திவாரத்தின் மீது வாழ்க்கை என்னும் உயர்ந்த கட்டிடத்தை நிர்மாணிக்க வேண்டும்.  தர்மமே நம்முடைய வாழ்க்கைக்கு அடிப்படையாக இருக்க வேண்டும்.

01 December 2011

தெய்வீகப் பொன்மொழிகள் - 85நம்முடைய மனநோய்களைத் தீர்ப்பதற்கு நமக்கு கடவுளின் அருள் வேண்டும்.  நம்முடைய மனதிலிருந்து கோபம், வெறுப்பு, பேராசை, காமவெறி இவைகளை விரட்ட வேண்டுமானால் மனதை அன்பால் நிரப்ப வேண்டும்.  ஒவ்வோருவர் உள்ளத்திலும் கடவுள் குடிகொண்டிருக்கிறார்.  நம்முடைய சுயநலத்தினாலும் மற்ற ஆசாபாசங்களாலும் அவர் பின்னுக்குத் தள்ளப் படுகிறார்.  அன்பு வழியாக அவைகளை அகற்றி மனதை அன்பினால் நிரப்பினால் அது கடவுள் குடி கொள்வதற்குத் தகுதியாக தூய்மை பெறும்.  

தெய்வீகப் பொன்மொழிகள் - 84
கடவுள் நாமத்தை விடாமல் உச்சரிக்க நாவைப் பழக்கப்படுத்த வேண்டும்.  நாம் விழிப்பு நிலையில் இருக்கும்போது எதை நினைக்கிறோமோ அதையே நாம் கனவில் பார்க்கிறோம்.  அதுபோலவே விடாமல் கடவுள் நாமத்தை எப்போதும், எந்த சூழ்நிலையிலும் உச்சரித்துக் கொண்டிருந்தால், மரணத் தருவாயில் தானாகவே கடவுளை அழைக்க முடியும்.  மரணத் தருவாயில் கடவுளை நினைவு கூர்வதென்பது இயலாத காரியம்.

தெய்வீகப் பொன்மொழிகள் - 83

உடற்பயிற்சிகள் தேகத்தின் தசைகளை வலுவாக்குவதுபோல் அடிக்கடி மந்திரங்களை உச்சரிப்பது நம்முடைய நரம்பு, நாடிகளை பலம் பெறச் செய்கிறது.  இதனால் சித்தம் சுத்திபெற்று, நம்முன் கடவுள் தங்கும் இடம் தூய்மை பெறுகிறது.  நடத்தையாலும் ஆசார அநுஷ்டானங்களாலும் தகுதி பெற்றவர்கள் மந்திரங்களை அறிந்து அவைகளைப் பயனுள்ள வகையில் உபயோகிக்கவும், காப்பாற்றவும் முடியும்.

தெய்வீகப் பொன்மொழிகள் - 82


வரதக்ஷணை நிகழ்காலத்தில் பிரச்சனைகளை உண்டாக்குவதோடு, எதிர்காலத்தில் நம்முடைய சமூகம் வீழ்ச்சியடைய வழிகோலுகிறது.  நம்முடைய சமூகத்தின் மீதும், கலாசாரம், தர்மங்களின் மீதும் நல்லெண்ணம் கொண்டவர்கள் வரதக்ஷணை ஒழிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.  நம்முடைய நாட்டின் சுதந்திரத்திற்காக எத்தனையோ தியாகங்கள் செய்து, கஷ்டங்களை அனுபவித்த நாம், நம்முடைய தர்மத்தைக் காப்பாற்றுவதற்காக வரதக்ஷணையை தியாகம் செய்ய முடியாதா? 

16 November 2011

தெய்வீகப் பொன்மொழிகள் - 81
இந்த வாழ்க்கையில் நலம் அடையக்கூடிய நிரந்தர செல்வம் பக்தி ஒன்றே.  ஆகவே, பாகவதம், புராணம் போன்றவைகளைக் கேட்டு பக்தியை விருத்தி செய்துகொள்ளும் சந்தர்பங்களை நழுவ விடக்கூடாது.  

தெய்வீகப் பொன்மொழிகள் - 80


பொருளாதாரத்திற்கான நியதிகள் நாம் வாயால் பேசுவதற்குப் பொருந்தும்.  கட்டுப்பாடற்று பேசுவது மனஸ்தாபங்களுக்கும், தொல்லைகளுக்கும் வழி வகுக்கும்.  நமக்கு ஆன்மீக ரீதியில் நன்மை பயக்கக்கூடிய பேச்சாலோ அல்லது பிறர் மனம் நோகாவண்ணம் பேசும் பேச்சாகவோ இருந்தால் நமக்கு ஏற்படும் பல தொல்லைகளைத் தவிர்க்கலாம்.  இது நம்முடைய செய்கைகளுக்கும் பொருந்தும். 

15 November 2011

தெய்வீகப் பொன்மொழிகள் - 79நாம் உலக ரீதியாக பயன் பெறுவதற்காக கடவுளிடம் பக்தி செலுத்தினால், அது பக்தியாகாது.  பண்டமாற்று வியாபாரமாகும்.  நம்முடைய ஆன்மீக உயர்வுக்காக பக்தி செலுத்தினால் ஒரு நதி சமுத்திரத்தை அண்டும்போது அதன் ஓசையும், வேகமும் அடக்கி சாந்தப்படுவதைப் போல நாமும் சாந்தியைப் பெறுவோம்.  தனக்கு வெளியிலே, தன்னைத்தவிர ஒன்று இருப்பதாகக் கருதி, ஆனந்தத்தைத் தேடி அந்த ஒன்றிடம்  பக்தி செலுத்துகிறான்.  தன்னையே ஒருநாள் அறிந்து கொள்ளும்போது தானும் கடவுளும் வேறல்ல ஒன்றுதான் என்ற உணர்வு ஏற்படும்.  

22 September 2011

தெய்வீகப் பொன்மொழிகள் - 78கடந்த காலங்களில் எத்தனையோ சோதனைகளை சந்தித்த போதிலும் நம்முடைய மதம் இன்றுவரை தழைத்திருப்பதற்கு நம்முடைய கோவில்களும், அவைகளில் நடைபெறும் உற்சவங்களும் காரணம்.  வேதங்களில் கூறப்பட்ட ஆன்மீகக கொள்கைகளும் ஒழுங்கு முறைகளும், நன்னெறிகளும் புராணங்கள் வழியே மக்களிடையே பரவி இன்று நிலவுகின்றன.  அவை அடிப்படை உண்மைகளை நம் மனம் ஏற்கும்படி கூறுகின்றன.  பொக்கிஷம் போன்ற இந்த மத நூல்களைப் படித்து, ஆராய்ந்து நாமும் நன்மை பெற்று உலகும் நன்மை பெறச்செய்வோமாக.   

தெய்வீகப் பொன்மொழிகள் - 77
சாதாரண மக்களுக்கான அவ்வளவு கடினமில்லாத தவம் பிருஹதாரண்யக உபநிஷத்தில் கூறப்பட்டிருக்கிறது.  நமக்கு உடல் பாதிப்பு ஏற்பட்டால் அது நாம் தவம் செய்வது போன்று விரதம் இருப்பது, வலியைத் தாங்கிக் கொள்வது, குளிர் காய்ச்சல் போன்றவைகளை பொறுமையுடன் அனுபவிப்பது முதலியவற்றுக்கு கடவுள் அளித்த ஓர் வாய்ப்பு என்று எண்ணி உடல் உபாதையை வரவேற்க வேண்டும்.  நோய்வாய்ப்பட்டால் அது நாம் நம்முடைய தேவைகளை மறந்து கடவுளை நினைக்க வாய்ப்பு என்று எண்ண வேண்டும்.  அவ்வாறு நினைத்தால், நம்முடைய கடமைகளை ஆண்டவனுக்கு அர்ப்பணிக்கும் வகையில் செய்ய நாம் அறிந்து கொள்வோம்.  

தெய்வீகப் பொன்மொழிகள் - 76
துன்பத்தைப் பற்றி வருந்திக் கொண்டிருப்பது மதத்தின் வழியாகாது.  நாம் சங்கடமான நிலைமையில் இருக்கும்போது தீய எண்ணங்கள் நம் மனதில் புகாமல் இருக்க பிரார்த்தனை செய்ய வேண்டும்.  அவ்வாறு செய்தால் சமாளிக்கும் திறமை வலுப்பெற்று துன்பமே அர்த்தமற்றதாகிவிடும்.  அத்தகைய நோக்கு ஞானத்தில் பிறப்பதாகும்.  ஒவ்வொருவரும் தத்தம் முயற்சியாலேயே ஞானத்தை அடைய வேண்டும்.  ஆகவேதான், நம் மதம் தனி மனிதனை அடிப்படையாகக் கொண்டது.  நம்மைச் சேர்ந்த, நாம் செய்யும் ஒவ்வொன்றையும் ஆண்டவனுக்கு அர்பணித்துவிட்டால் சக துக்கங்களால் பாதிக்கப்படாமல் இருப்பதற்கான சமமான மனநிலையை நாம் பெறலாம்.
Related Posts with Thumbnails