26 November 2010

தெய்வீகப் பொன்மொழிகள் - 51

ஜகத்குரு 

கடவுள் பக்தி, உண்மை பேசுதல் பிறருக்கு உதவி செய்வது போன்ற அடிப்படைக் கோட்பாடுகளில் மதங்களுக்கிடையே எந்த ஒரு வித்தியாசமும் இல்லை.  அந்தந்த மதத்தலைவர்களின் அனுபவத்தில் பிறந்த சில கொள்கைகளிலும் ஆசாரங்களிலும் முக்கியமாக மதங்களுக்கிடையே வேறுபாடு உள்ளது.  

26 October 2010

தெய்வீகப் பொன்மொழிகள் - 50

இந்து மதம் மத மாற்றத்தை ஆதரிக்கவில்லை.  ஜன்ம விமோசனத்தைத் தான் எல்லா மதங்களும் குறிக்கோளாக எடுத்துரைக்கின்றன.  ஒருவன் தன்னுடைய மத போதனைகளை வழுவாமல் அனுசரித்து வந்தால், அதுவே அவனுக்கு விமோசனத்தை அளிக்கும் என்று நாங்கள் நம்புகிறொம்.  ஆகவே, ஒரு மதத்தைப் பற்றி புகழ்ந்து கூறவோ, மற்றொன்றை இகழவோ எந்த அவசியமும் இல்லை.  

தெய்வீகப் பொன்மொழிகள் - 49



இந்த உலகமே ஒரு நாடகம் ;  ஆண்டவன் அதன் கதாசிரியர்.  

தெய்வீகப் பொன்மொழிகள் - 48



சத்தியத்தை சர்க்கரை பூசிய மாத்திரைகளாக்கித் தரவேண்டும்.  சர்க்கரை பூச்சுத்தான் மொத்தமே சர்க்கரையாகி விடக்கூடாது.  வெறும் இந்திரியங்களுக்கு மிகவும் ருசிக்கும் சமாசாரங்களில்தான் ஜனங்களுக்கு அதிக கவர்ச்சி இருக்கிறதென்று சொல்லிக்கொண்டே இவ்விதமே எழுதுவது சரியல்ல.  பத்திரிகையாளர்கள் முனைந்தால் தானாகவே ஜனங்களுக்கு நல்ல விஷயங்களில் ருசி பிறக்கும்.  நம்மையும் உயர்த்திக் கொண்டு, நம் வாசகர்களையும் உயர்த்த வேண்டும் என்கிற கடமை உணர்ச்சியைப் பத்திரிகையாளர்களும் எழுத்தாளர்களும் பெறவேண்டும். 

04 October 2010

தெய்வீகப் பொன்மொழிகள் - 47

உயர்ந்த எண்ணம் வளர்ந்து வளர்ந்து பல காலங்களாக உருவெடுத்திருக்கிறது.  உயர்ந்த எண்ணங்கள் ஒவ்வோரிடத்தில் ஒவ்வொருவிதமாக உருவெடுக்கின்றன.  சிஷ்ய ரூபமாக, தியாக ரூபமாக, சேவை ரூபமாக, தான ரூபமாக, இப்படிப் பல உருவங்களாக உயர்ந்து வெளிப்படுகிறது.  இந்த உயர்ந்த எண்ணம் மிகவும் உயர்ந்து, விரிந்து எடுத்துக்கொள்கிற உருவமே எல்லா உயிர்களிடமும் அன்பு,  உலகம் முழுவதும் ஒன்றாகிவிட வேண்டும்  என்று எண்ணுகிற அன்பில் பிறப்பதே,  மிகப் பெரிய பண்பாடு.

தெய்வீகப் பொன்மொழிகள் - 46


" ராவணன் சீதையைத் தூக்கிக் கொண்டு போன போது, ஒரு மைல் தூரத்திலிருந்த ராமனுக்கு சீதை போட்ட கூச்சல் காதில் விழவில்லையாம்.  அப்படிப் பட்டவனை இப்போது பக்தர்கள் கூப்பிட்டால் என்ன பிரயோஜனம்? " என்று கேலி செய்தவர்கள், எழுதியவர்கள் இருக்கிறார்கள்.  ராமனாக இந்த உலகத்தில் வாழ்ந்தபோது மனித வேழத்தில் இருந்தான்;  மனிதர்களைப் போலவே வாழ்ந்தான் என்பதை இவர்கள் மறந்து பேசுகிறார்கள்.  இராமாயண நாடகம் இருக்கிறது.  வால்மீகி, லவகுசர்களை இராமனிடம் அழைத்துக் கொண்டு போகும் கட்டம். 

இராமஸ்வாமி அய்யங்கார் ராமர் வேஷத்தில் நடிக்கிறார்.  அவருடைய சொந்தப் பிள்ளைகளே லவகுசர்களாக நடிக்கிறார்கள்.  நாடக இராமன் வால்மீகியைப் பார்த்து " இந்தக் குழந்தைகள் யார் ? " என்று கேட்கிறார்.  இராமஸ்வாமி அய்யங்காருக்குத் தம் பிள்ளைகளையே தெரியவில்லையா என்று நாடகம் பார்க்கிறவர்கள் கேலி செய்யலாமா. அல்லது நாடக வால்மீகி " இவர்கள் இராமஸ்வாமி அய்யங்காரின் பிள்ளைகள் ! நீங்கள்தானே அந்த இராமஸ்வாமி அய்யங்கார் ? " என்று பதில் சொன்னால் எப்படி இருக்கும் ?

தெய்வீகப் பொன்மொழிகள் - 45



ஸ்ரீ ஆதிசங்கர ஜயந்தியானது மற்ற ஜயந்திகளை விடப் பெரிய புண்யகாலம் என்று நினைப்பது வழக்கம். இதற்கு ஒரு முக்கியமான காரணம் உண்டு.  ஸ்ரீ ச்ங்கர அவதாரத்திற்கு முன்,  வைதீக மதம் ஆட்டம் கண்டபோது,  அதுவரை வேத புராணங்களால் விதிக்கப்பட்ட புண்ணிய காலங்கள் எல்லாம் தத்தளித்தன.  ஒரு மதத்தில் நம்பிக்கை போய்விட்டால் அந்த மதப் பண்டிகைகளை யார் கொண்டாடுவார்கள்? 


அப்போது ஸ்ரீ சங்கர ஜயந்தி நிகழ்ந்ததால்தான் அந்தப் புண்ணிய காலங்கள் எல்லாம் நிலை நிறுத்தப்பட்டன.  ஸ்ரீ சங்கர ஜயந்தி நிகழ்ந்திராவிட்டால், இன்று ஸ்ரீராம நவமியும், கோகுலாஷ்டமியும், சிவராத்திரியும், நவராத்திரியும் மற்ற புண்ணிய தினங்களையும் கொண்டாடுவோமா என்பது சந்தேகம். 

15 September 2010

தெய்வீகப் பொன்மொழிகள் - 43



ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள அனைவரும் மாலை வேளைகளில் வீட்டிலேயே ஒரு பத்து நிமிஷமாவது பகவத் நாமாக்களை பாடி பஜனை செய்யவேண்டும்.  இதில் சாத்தியமில்லாத சிரமம் எதுவும் இல்லை.  குடும்பத்தினர் எல்லோரும் பூஜை அறையில் அல்லது பூஜைக்கென்று தனி அறை இல்லாவிட்டால் - ஒரு குத்துவிளக்கை ஏற்றி வைத்து அதன் முன் உட்கார்ந்து கீர்த்தனங்களைப் பாடவேண்டும்.


 பகவானைப் பாடுவதற்கு வெட்கமே வேண்டாம்.  சங்கீத ஞானம்,  ராக பாவம், சாரீர வசதி இல்லாவிட்டாலும், பரவாயில்லை.  பக்தி, பாவனைதான் முக்கியம்.  ஏதேதோ விளையாட்டுகளில் ஓடிக்கொண்டிருக்கிற குழந்தை, அம்மாவின் நினைப்பு  வந்ததும், " அம்மா, அம்மா" என்று கத்துகிறதல்லவா?
அதில் வெட்கமோ, ச்ங்கீத அழகோ இல்லை.

29 August 2010

தெய்வீகப் பொன்மொழிகள் - 42



சங்கர பகவத்பாதர்கள் பக்தியின் லக்ஷணத்தை சிவானந்த லஹரியில் இவ்வாறு வர்ணித்திருக்கிறார்:

 "அழிஞ்சில் விதை எப்படித் தாய் மரத்துடனேயே ஒட்டிக் கொள்கிறதோ, ஊசி எப்படி காந்தத்தால் கவரப் படுகிறதோ, பதிவிரதை எப்படி தன் பதியின்  நினைவிலேயே ஆழ்ந்திருக்கிறாளோ, கொடி எப்படி மரத்தைத் தழுவி வளர்கிறதோ, நதி எப்படி சமுத்திரத்தில் கலக்கிறதோ,  அப்படியே பசுபதியின் பாதாரவிந்தங்களில் எக்காலமும் மனத்தை அமிழ்த்தியிருப்பதுதான் பக்தி என்பது.

தெய்வீகப் பொன்மொழிகள் - 41



ஆஸ்பத்திரி வைத்து உடல் வியாதியை தீர்ப்பது மட்டும் போதாது.  நோயாளிகளது மனதில் கெட்ட எண்ண ங்கள் என்ற வியாதி
இல்லாமல் செய்வதே அதைவிட முக்கியம்.  இவ்வாறேதான் பள்ளிக்கூடங்கள் வைத்துப் படிப்பை விருத்தி செய்கிறோம்.  
படித்து வெளியில் வந்தவர்கள் யோக்கியர்களாக இல்லாவிட்டால்,  பள்ளிக்கூடம் வைத்து பயன் நமக்கு ஏது?  


 பக்தி, கட்டுப்பாடு, தியாகம் இவைகள் இல்லாமல் படிப்பால் வெறும் புத்தியை மட்டும் வளர்த்துக் கொண்டால் சாமர்த்தியமாக தவறுகள் செய்து  தப்பித்துக் கொள்வதற்கு வழியாகிறது.  அவன் நல்லவனாக இருக்க வேண்டும் என்பதுதான் லட்சியம்.  இப்படி நல்லவனாக்குகிற நிலையங்களாக ஆலயங்களும், ஆஸ்பத்திரி, பள்ளிக்கூடம்  போலவே,  இவைகளை விடவும் அவசியம் இருக்கத்தான் வேண்டும்.

06 April 2010

தெய்வீகப் பொன்மொழிகள் - 40


கோயில்களும் அவற்றைச் சார்ந்த கலைகளும் ஓங்கி வளர்ந்திருந்த நாட்களில் நம் தேசம் எப்படி இருந்தது என்பதற்கு மெகஸ்தனிஸ் ஸர்டிபிகேட் கொடுத்து இருக்கிறான். இவை எல்லாம் மங்கிப் போயிருக்கிற இன்று தேசம் இப்படி இருக்கிறதென்பதையே கண்கூடாகவே பார்க்கிறொம். எங்கு பார்த்தாலும் பொய்யும், சஞ்சலமும், கலப்படமும், அதர்மமும் மிகுந்துவிட்டன. இவை நிவர்த்தியாக வழி ஒன்றுதான்; பழையகாலத்தைப்போல் கோயில்களை சமூக வாழ்க்கையின் மையமாக்கிவிட வேண்டும். அன்றுபோல் இன்றும் தெய்வ சம்பந்தமான பழமையான கலைகளை வளர்க்க வேண்டும்.

தெய்வீகப் பொன்மொழிகள் - 39


ஆபீஸ் கட்டிடங்கள், காட்டேஜ்கள் எல்லாம் இப்போது பல க்ஷேத்திரங்களில் ஏராளமாக முளைத்துவிட்டன. தெய்வ சம்பந்தமற்ற பல காரியங்கள் நடக்கின்றன. இது சாந்நியத்தைப் பாதிக்கிறது. ஏதோ எட்டாக் கையில் இருக்கிற கோயில்களில்தான் விச்ராத்தியான சூழ்நிலை நிலவுகிறது. காட்டேஜ்களும், சுற்றுலா கோஷ்டிகளும் பக்தியைவிட பொழுதுபோக்கை அதிகப்படுத்துகின்றன.

தெய்வீகப் பொன்மொழிகள் - 38


சின்னஞ்சிறிய சூஷ்மமான தர்மங்களை எல்லாம் மறந்துவிட்டோம். நமக்கு உணவு தருபவனுக்கு நல்லபடி நிவேதனம் நடக்கவேண்டும். நமக்கு உடை தருபவனுக்கு நல்ல வஸ்திரம் இருக்கவேண்டும். இப்போது ஓர் ஊரில் யார் அழுக்குத் துணிகட்டிக் கொண்டிருக்கிறான் என்றால் அது ஸ்வாமிதான். நம் ஊர் கோயில் ஸ்வாமியின் வஸ்திரம் சுத்தமாயிருக்கிறதா என்பதில் கவனம் செலுத்திவிட்டோமானால், நம்மனதின் அழுக்கு போய்விடும்.

03 March 2010

தெய்வீகப் பொன்மொழிகள் - 37

இதோ நமக்கு முன் வாழைப்பழ சீப்பு வைத்திருக்கிறது. "இதைப்பார், இது மஞ்சளாக இருக்கிறது" என்று சொன்னால், இது மஞ்சளாகத்தான் இருக்கிறது என்று காண்கிறீர்கள். அதற்குமேல் மனதில் அதைப்பற்றி எந்தவித பிரதி சிந்தனையும் [ ] எழுவதில்லை. மாறாக, இந்த வாழைப்பழத்தைக் காட்டி, "இதோ பார், இது சிவப்பாக இருக்கிறது" என்று நான் சொல்லியிருந்தால் உடனே உங்கள் மனதில் ஒரு ஆட்சேப உணர்வு எற்பட்டிருக்கும். இது மஞ்சள் என்றோ, சிவப்பு என்றோ நான் சொல்லாமல் "இந்த வாழைப்பழம் சிவப்பாக இருப்பதாக நினைத்துக்கொள்ளுங்கள்' என்று சொன்னால் அப்போது உங்கள் மனதில் ஒரு பிரதி உணர்வு உண்டாகிறது. மஞ்சள் பழத்தையே சிவப்பாக இருப்பதுபோல் கற்பனை செய்து பார்க்கிறீர்கள். மனதை ஒருமுகப்படுத்தினால் அவ்வாறு பாவிக்கவும் முடிகிறது.



மூர்த்தி வழிபாடு என்பது இத்தகையதுதான். ஒரே மூர்த்தியைக் காட்டி, "இது பரமாத்மா" என்றால் யாரும் ஒப்புக்கொள்ளமாட்டார்கள். ஆனால் "இதை பரமாத்மாவாக பாவியுங்கள்" என்றால் அவ்வாறு பாவிக்க முடிவதாகத் தோன்றும் - வாழைப்பழத்தை சிவப்பாக கற்பனை செய்வதுபோல், ஆனால் சிவப்பு என்ன என்பது மனதுக்குத் தெரிவதுபோல், பரமாத்மா லக்ஷணம் தெரியாதே. தெரிந்த விஷயங்களில்தான் மனம் ஈடுபட்டு நிற்கும். எனவே, ஒரே காருண்யமும், சௌந்தர்யமும் வழிகிறது போன்றே ஸ்திரீ ரூபத்தில் விக்ரகம் செய்து "இதில் பரமாத்மா தாயாராக வந்திருக்கிறார் என்று பாவனை பண்ணு" என்றால், மனம் அதை நன்றாகக் கிரகித்துக் கொண்டு அப்படியே ஆழ்ந்து ஈடுபட முடிகிறது.

தெய்வீகப் பொன்மொழிகள் - 36



சொந்த விருப்பு வெறுப்பில்லாமல் உலக க்ஷேமத்திற்காக காரியம் செய்து ஆத்ம பரிசுத்தி பெறும் பண்பாடு வேதகாலம் தொட்டு நம் தேசத்தில் தழைத்து வந்திருக்கிறது. அப்பண்பாட்டை ஒரு கையடக்கமான பேழையில் வைத்துக்கொடுத்ததுபோல் கீதையில் நமக்கு அனிந்திருக்கிறார் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா. இந்த உபதேசத்தை நம் வாழ்க்கையில் ஒவ்வொரு காரியத்திலும் உரைத்து அலசிப்பார்க்க வேண்டும். இந்தக் காரியத்தில் சொந்த லாபம், பேர், புகழ் இருக்கிறதா? ஆசை இருக்கிறதா? துவேஷம் இருக்கிறதா? பட்சபாதம் இருக்கிறதா? இவை இருந்தால், வெளிப்பார்வைக்கு நாம் செய்வது எவ்வளவு உயர்வாக இருந்தாலும், அது பாபம்தான்.

15 February 2010

தெய்வீகப் பொன்மொழிகள் - 35


இப்போதெல்லாம் சிலர் சமய ஆசாரங்களெல்லாம் வெளி விஷயம்தானே என்று நினைக்கிறார்கள். உண்மையில் வெளியில் செய்கிற காரிய்மும், வெளியில் அணிகிற சின்னங்களும் உள்ளுக்கு நன்மை செய்கின்றன. உடலின் காரியமும் உள்ளத்தின் பாவமும் [ Bhava ] ஒன்றுக்கொன்று சம்பந்தமுடையவை. சற்றும் எதிர்பார்க்காமல் ஒருவருக்கு ஒரு பெரிய தொகை லாட்டரியில் கிடைத்தது என்கிற செய்தி கேட்டதும் அவருடைய மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. இது ஒரு மனோபாவம்தான். ஆனால், அதன் கரணமாக உடம்பில் படபடப்பு உண்டாகிறது. மூச்சு அப்படியே சிறிது காலம் அடங்கி மூர்ச்சையாகிவிடுகிறது. இவ்விதமாக வெளிச்சின்ன்ங்களுக்கும், உள் உணர்வுகளுக்கும் உள்ள தொடர்பு பற்றி கேள்வி எழுப்புகிறவர்கள், ராணுவ வீரர் தன்னுடைய யூனிபார்மில் இல்லாவிட்டால் அவருக்கு தைரியம் வராதா என்று கேட்கலாம். ஆனால் உலகம் முழுவதும் மிலிடரி என்றால் யூனிபார்ம் இருக்கத்தான் செய்கிறது. அதுவே வீரத்தைத் தூண்டுகிறது என்றும் சொல்வார்கள்.

தெய்வீகப் பொன்மொழிகள் - 34



நம்முடைய சாஸ்திரங்களில் இல்லாத ஸயன்ஸ் எதுவுமே இல்லை. ஆயுர்வேதத்தை சரகர், சுச்ருதர் முதலானவர்களின் நூல்களைப் பார்த்தால். இப்போதைய பெரிய டாக்டர்களும் அதிசயிக்கும்படியான மருத்துவ முறைகளையும், சர்ஜரி முறைகளையும் தெரிந்து கொள்கிறோம். நவீன மருந்துகளைவிட, நவீன சர்ஜரிக்கு நாம் பழக்கமாகிவிட்டதால், ஆயுர்வேதத்தில் சர்ஜரிக்கு இடமில்லை என்று பலர் நினைக்கிறார்கள். என்ஸைக்லோபீடியா பிரீடானிகாவில் கூறியிருக்கிறபடி, சர்ஜரி இந்தியாவில்தான் தோன்றியது. தன்னுடைய மிகத் தீவிரமான பக்தியைப் பற்றிக் குறிப்பிடும்போது, குலசேகர ஆழ்வார் "வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால் மாளாத காதல் நோயாளன்போல்" என்கிறார். அறுப்பது" என்பது சர்ஜரி. "சுடுவது" காடரைஸேஷன் [Cauterisation] .

04 February 2010

தெய்வீகப் பொன்மொழிகள் - 33



தாமிரச்செம்பு, கிணற்றில் ப்த்து வருஷங்கள் கிடந்து விட்டதென்றால், அதை எத்தனை தேய்த்தாக வேண்டும் ! எவ்வளவுக்கெவ்வளவு தேய்க்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு வெளுக்கிறது.

இவ்வளவு வருஷ காலம் எத்தனை கெட்ட காரியங்களைச் செய்து நம்முடைய சித்தத்தில் அழுக்கை ஏற்றிக்கொண்டு விட்டோமோ, அந்த அழுக்கைப் போக்க எத்தனை நல்ல கர்மாநுஷ்டங்களைச் செய்யவேண்டும். சித்தசுத்தி வளரும் நல்ல சீலங்கள் உண்டாகும்.

தெய்வீகப் பொன்மொழிகள் - 32

வீட்டிலேயே இருக்கிற குழந்தை சதா ஏதோ விஷமம் பண்ணிக்கொண்டிருக்கிறது. அதையே பள்ளிக்கு அனுப்பிவிட்டால்,

"இத்தனை மணிக்குப் போக வேண்டும். இன்ன இன்ன பாடங்களை அதற்குள் எழுதிவிட வேண்டும்; திரும்ப இத்தனை மணிக்குத்தான் வரமுடியும்; வந்தால் இதைச் செய்ய வேண்டும்" என்று அதற்கு ஒரு கட்டுப்பாடு வந்துவிடுகிறது. முன்பு காணப்பட்ட விஷம குணங்கள் எங்கோ போய்விடுகின்றன.

அதேபோல் நாம் கெட்ட எண்ணத்திலும், காரியத்திலும ஈடுபட அவகாசம் இன்றி, நல்ல காரியங்களை ஒரு விதிப்படி ஒழுங்கு தவறாமல் செய்வதுதான் முக்கியம். இதற்குத்தான் சாஸ்திரங்கள் நமக்கு விதிகள் போட்டிருக்கின்றன.

29 January 2010

தெய்வீகப் பொன்மொழிகள் - 31


பிறருக்கு உதவி செய்வதால், சேவை செய்வதால் அல்லது ஸ்வாமிக்கு பூஜை செய்வதால் ஒவ்வொருவருக்கும் உள்ளுக்குள்ளே ஒரு நிறைவு ஏற்படுகிறது. நாம் செய்யும் சேவையில் மற்றவர்களூக்கு உண்மையான லாபம் இருந்தாலும் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். ஆனால், அதைச் செய்யும்போது நமக்கே திருப்தியும், அமைதியும் உண்டாகின்றன. பிறருக்கு உபகாரமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் தனக்கே உபகாரமாக இருக்கிறது. நம்முடைய மனநிறைவுக்காகவே நாம் பிறரிடம் அன்பு காட்டுகிறோம் என்பது யக்ஞவல்க்ய மகரிஷி உபநிஷத் மூலம் அளிக்கும் போதனை.

05 January 2010

தெய்வீகப் பொன்மொழிகள் - 30




மகாபாரதத்தில் என்ன இருக்கிறது? பொறுமையின் வடிவமாக தருமபுத்திரர் இருக்கிறார். சத்தியமான பிரதிஞை என்பதற்கு பீஷ்மர் இருக்கிறார். தானத்துக்கு கர்ணன், கண்ணியத்துக்கு அர்ஜுனன். இதுபோல் இராமாயணத்தில் சகல தர்மங்களின் மூர்த்தியாக ஸ்ரீராமர் இருக்கிறார்.



பெண்களுடைய உத்தமமான தர்மத்திற்கு சீதை இருக்கிறாள். இராமனுக்கு நேர் விரோதியான இராவணனுக்கு மனைவியாக இருக்கும் மண்டோதரியும், சீதைக்குக் குறைவில்லாத மகாபதிவிரதையாக இருக்கிறாள். இராமாயண, பாரத கதைகளைக் கேட்கும்போது இத்தகைய உத்தம ஆத்மாக்களின் ஞாபகம் வருகிறது.

தெய்வீகப் பொன்மொழிகள் - 29




வேத அத்யயனம், மோகம், தியானம், பூஜை இவற்றைக் கஷ்டப்பட்டு அப்பியாசம் செய்வதால் கிடைக்கும் ஈசுவராநுபவத்தை தெய்வீகமான சங்கீதத்தின் மூலம், நல்ல ராக, தாள ஞானத்தின் மூலம் சுலபமாகப் பெற்றுவிடலாம். இப்படி தர்ம சாஸ்திரம் என்னும் ஸ்மிருதியைத் தந்திருக்கும் யாக்ஞவல்க்ய மகரிஷியே சொல்லியிருக்கிறார். வீணா கானத்தை அவர் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார். கடுமையான பிரயாசை இல்லாமலே சங்கீதத்தால் மோக்ஷமார்க்கத்தில் போய்விடலாம் என்கிறார்.
Related Posts with Thumbnails