22 September 2011

தெய்வீகப் பொன்மொழிகள் - 78



கடந்த காலங்களில் எத்தனையோ சோதனைகளை சந்தித்த போதிலும் நம்முடைய மதம் இன்றுவரை தழைத்திருப்பதற்கு நம்முடைய கோவில்களும், அவைகளில் நடைபெறும் உற்சவங்களும் காரணம்.  வேதங்களில் கூறப்பட்ட ஆன்மீகக கொள்கைகளும் ஒழுங்கு முறைகளும், நன்னெறிகளும் புராணங்கள் வழியே மக்களிடையே பரவி இன்று நிலவுகின்றன.  அவை அடிப்படை உண்மைகளை நம் மனம் ஏற்கும்படி கூறுகின்றன.  பொக்கிஷம் போன்ற இந்த மத நூல்களைப் படித்து, ஆராய்ந்து நாமும் நன்மை பெற்று உலகும் நன்மை பெறச்செய்வோமாக.   

தெய்வீகப் பொன்மொழிகள் - 77




சாதாரண மக்களுக்கான அவ்வளவு கடினமில்லாத தவம் பிருஹதாரண்யக உபநிஷத்தில் கூறப்பட்டிருக்கிறது.  நமக்கு உடல் பாதிப்பு ஏற்பட்டால் அது நாம் தவம் செய்வது போன்று விரதம் இருப்பது, வலியைத் தாங்கிக் கொள்வது, குளிர் காய்ச்சல் போன்றவைகளை பொறுமையுடன் அனுபவிப்பது முதலியவற்றுக்கு கடவுள் அளித்த ஓர் வாய்ப்பு என்று எண்ணி உடல் உபாதையை வரவேற்க வேண்டும்.  நோய்வாய்ப்பட்டால் அது நாம் நம்முடைய தேவைகளை மறந்து கடவுளை நினைக்க வாய்ப்பு என்று எண்ண வேண்டும்.  அவ்வாறு நினைத்தால், நம்முடைய கடமைகளை ஆண்டவனுக்கு அர்ப்பணிக்கும் வகையில் செய்ய நாம் அறிந்து கொள்வோம்.  

தெய்வீகப் பொன்மொழிகள் - 76




துன்பத்தைப் பற்றி வருந்திக் கொண்டிருப்பது மதத்தின் வழியாகாது.  நாம் சங்கடமான நிலைமையில் இருக்கும்போது தீய எண்ணங்கள் நம் மனதில் புகாமல் இருக்க பிரார்த்தனை செய்ய வேண்டும்.  அவ்வாறு செய்தால் சமாளிக்கும் திறமை வலுப்பெற்று துன்பமே அர்த்தமற்றதாகிவிடும்.  அத்தகைய நோக்கு ஞானத்தில் பிறப்பதாகும்.  ஒவ்வொருவரும் தத்தம் முயற்சியாலேயே ஞானத்தை அடைய வேண்டும்.  ஆகவேதான், நம் மதம் தனி மனிதனை அடிப்படையாகக் கொண்டது.  நம்மைச் சேர்ந்த, நாம் செய்யும் ஒவ்வொன்றையும் ஆண்டவனுக்கு அர்பணித்துவிட்டால் சக துக்கங்களால் பாதிக்கப்படாமல் இருப்பதற்கான சமமான மனநிலையை நாம் பெறலாம்.
Related Posts with Thumbnails