03 March 2010

தெய்வீகப் பொன்மொழிகள் - 37

இதோ நமக்கு முன் வாழைப்பழ சீப்பு வைத்திருக்கிறது. "இதைப்பார், இது மஞ்சளாக இருக்கிறது" என்று சொன்னால், இது மஞ்சளாகத்தான் இருக்கிறது என்று காண்கிறீர்கள். அதற்குமேல் மனதில் அதைப்பற்றி எந்தவித பிரதி சிந்தனையும் [ ] எழுவதில்லை. மாறாக, இந்த வாழைப்பழத்தைக் காட்டி, "இதோ பார், இது சிவப்பாக இருக்கிறது" என்று நான் சொல்லியிருந்தால் உடனே உங்கள் மனதில் ஒரு ஆட்சேப உணர்வு எற்பட்டிருக்கும். இது மஞ்சள் என்றோ, சிவப்பு என்றோ நான் சொல்லாமல் "இந்த வாழைப்பழம் சிவப்பாக இருப்பதாக நினைத்துக்கொள்ளுங்கள்' என்று சொன்னால் அப்போது உங்கள் மனதில் ஒரு பிரதி உணர்வு உண்டாகிறது. மஞ்சள் பழத்தையே சிவப்பாக இருப்பதுபோல் கற்பனை செய்து பார்க்கிறீர்கள். மனதை ஒருமுகப்படுத்தினால் அவ்வாறு பாவிக்கவும் முடிகிறது.



மூர்த்தி வழிபாடு என்பது இத்தகையதுதான். ஒரே மூர்த்தியைக் காட்டி, "இது பரமாத்மா" என்றால் யாரும் ஒப்புக்கொள்ளமாட்டார்கள். ஆனால் "இதை பரமாத்மாவாக பாவியுங்கள்" என்றால் அவ்வாறு பாவிக்க முடிவதாகத் தோன்றும் - வாழைப்பழத்தை சிவப்பாக கற்பனை செய்வதுபோல், ஆனால் சிவப்பு என்ன என்பது மனதுக்குத் தெரிவதுபோல், பரமாத்மா லக்ஷணம் தெரியாதே. தெரிந்த விஷயங்களில்தான் மனம் ஈடுபட்டு நிற்கும். எனவே, ஒரே காருண்யமும், சௌந்தர்யமும் வழிகிறது போன்றே ஸ்திரீ ரூபத்தில் விக்ரகம் செய்து "இதில் பரமாத்மா தாயாராக வந்திருக்கிறார் என்று பாவனை பண்ணு" என்றால், மனம் அதை நன்றாகக் கிரகித்துக் கொண்டு அப்படியே ஆழ்ந்து ஈடுபட முடிகிறது.

No comments:

Related Posts with Thumbnails