08 January 2011

தெய்வீகப் பொன்மொழிகள் - 62



இவ்வளவு விரிவான சடங்குகள் எதற்கு? மௌனப்பிரார்த்தனை போதாதா?  என்ற கேள்வி எழலாம்.  சடங்குகளுடன் நிவேதனம் செய்வதின் உட்கருத்து என்னவென்றால் ஒரு பக்தன் எல்லாவற்றிற்கும் மூலமாக இருக்கும் ஒன்றையும் தான் அனுபவித்து இன்பம் பெறும் பொருள்களின் உள் தத்துவத்தையும் உணர்ந்து நன்றி செலுத்தும் வகையாக தான் அனுபவிக்கும் பொருள்களை முதலில் அந்த மூலத்திற்கு நிவேதனம் செய்கிறான்.  மிகவும் உயர்ந்தவைகளையும், மிகவும் பரிசுத்தமானவைகளையும் மட்டும் 
ஆண்டவனுக்கு நிவேதனம் செய்ய வேண்டுமென்பதால் [நிவேதனம் செய்யப்படாத எதையும் அனுபவிக்கக்கூடாது].  


இப்பழக்கம் ஒவ்வொருவரும் நிவேதனத்துக்கு உரியவைகளையே பெற்று அதன் மூலம் மகிழ்ச்சியடைய உதவும்.  நம்முடைய வாழ்க்கை பூர்ணமாகவும், பரிசுத்தமாகவும் அமைய இது மிகவும் உதவும்.  

தெய்வீகப் பொன்மொழிகள் - 61

நமக்கு விருப்பமான ஒன்றோ அல்லது ஒரு நபரோ நம்மை விட்டுப் பிரிய நேர்ந்தால் அல்லது நாம் அவர்களிடமிருந்து பிரிய நேர்ந்தாலோ நாம் துக்கப் படுகிறோம்.  ஆகவே ஒன்றின் மீது ஆசை வைத்த அதே நேரத்தில் துக்கத்திற்கு விதை அம்மதம் மங்க விதைக்கப்படுகிறதென்று தெரிகிறது. 


நாம் பற்றுதல் கொண்ட பொருள்களிடமிருந்து மரணம் நம்மைக் கட்டாயமாகப் பிரித்து எல்லோருக்கும் துக்கத்தைத்தான் விளைவிக்கிறது.  

தெய்வீகப் பொன்மொழிகள் - 60

பழுக்காத ஒரு மாங்காயைப் பறித்தால் அதிலிருந்தும், அதன் காம்பிலிருந்தும் [பிரிவால் கண்ணீர் விடுவதுபோல்] பால் சுரக்கிறது.  அது பழுத்துவிட்டால் தானே காம்பிலிருந்து பிரிந்து விழுந்து விடுகிறது. [கண்ணீர் விடுவதில்லை].  அதுபோல் மரணம் நம்மை அழைக்கும்போது வருத்தமின்றி இந்த உலகத்தை விட்டுச் செல்லும் திறனை வளர்த்துக் கொள்ளவேண்டும்.  

07 January 2011

தெய்வீகப் பொன்மொழிகள் - 59



ஒவ்வொரு சாஸ்திரத்தை ஏற்படுத்தியவருக்கும் ஆச்சாரியர் என்று பெயர்.  ஆச்சாரியர் என்பவர் சாஸ்திர அர்த்தங்களை பிறருக்கு விளக்கிக் கூறி, தானும் அவைகளின்படி செயல்பட்டு மற்றவர்களையும் அந்த ஆசாரங்களில் நிலை நிற்கச் செய்பவர்.  

தெய்வீகப் பொன்மொழிகள் - 58



நம்முடைய பாபங்களைக் கழித்துக்கொண்டு வாழ்க்கையின் குறிக்கோளை விமோசனம் பெற மதம் வழிமுறைகளைத் தருகிறது.  

தெய்வீகப் பொன்மொழிகள் - 57



தருமம் நம்முடைய மதம் என்னும் மரத்தின் வேர்;  பக்தியும் ஞானமும் அதன் மலர்கள், பழங்கள்.  அந்த வேர் காய்ந்து போகாமல் பாதுகாப்பது நம் கடமை.  மிகப் பரவலான கருத்தொற்றுமையின் அடிப்படையில்
தருமத்தைப் பாதுகாப்பதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும்.  இதற்கு ஓரளவு தியாகம் தேவைப்படுகிறது.  

தெய்வீகப் பொன்மொழிகள் - 56



அரசாங்கத்துக்கு நாம் செலுத்த வேண்டிய வரியை ஒரு வரி வசூல் செய்யும் அதிகாரியின் மூலம் செலுத்துவது போன்று ஈசுவரனுக்கு நாம் செய்யும் நிவேதனங்கள் தனிப்பட்ட காரியங்களுக்காக ஏற்படுத்தப்பட்ட அந்தந்த தெய்வங்களின் மூலம் ஈசுவரனை அடைய வேண்டியிருக்கிறது.  இந்த அம்சம் நம்முடைய மதத்தைப் பிற மதங்களிலிருந்து வேறுபடுத்துகிறது.  

தெய்வீகப் பொன்மொழிகள் - 55



ஒரு ஜாதி மற்றொரு ஜாதியை விட உயர்ந்தது என்ற பேச்சுக்கே இடமில்லை.  எந்த ரிஷிகள் பிராமணர்களுக்கு மூலமோ அந்த ரிஷிகளின் வாழ்க்கை முறைக்கு பிராமணர்கள் திரும்பினால் மட்டுமே இந்த உயர்வு, தாழ்வு மனப்பான்மை மறையும்.  அவ்வாறு செய்வதன் மூலம் நாம் பாபச் செயல்களிலிருந்து விலகி ஈசுவரனின் அருளுக்குப் பாத்திரமாகி உலக நன்மைக்கு நம்மால் முடிந்ததைச் செய்ய முடியும்.  

தெய்வீகப் பொன்மொழிகள் - 54




தலையில் குடத்துடன் நடனம் ஆடுபவள், சங்கீதத்திற்கும் தன்னுடைய விதவிதமான அங்க அசைவுகளுக்குமிடையே தலையிலுள்ள குடத்தை ஒருகணம் கூட மறப்பதில்லை.  அவ்வாறே 
நம்முடைய தினசரி வாழ்க்கையின் செயல்களுக்கிடையே நம்முடைய வாழ்க்கையின் குறிக்கோளை
மறக்கக்கூடாது.  



தெய்வீகப் பொன்மொழிகள் - 53


ஆண்மீக விஷயங்களில் உள்ள கட்டுப்பாடு இராணுவத்திலுள்ள கட்டுப்பாட்டைவிட கடுமையானது.  வாழ்க்கையின் குறிக்கோளை நாம் அடையவேண்டும் என்றால் ஒழுங்கு முறைகளுக்கு கட்டுப்பட்டுதான்
ஆகவேண்டும்.  அவ்வாறிருந்தால் நாம் யாரிடமும் அச்சம் கொள்ளத் தேவை இல்லை. நம்முடைய வாழ்க்கைத் தூய்மை உலகோரின் மதிப்பையும் மரியாதையையும் பெற்றுத் தரும்.

தெய்வீகப் பொன்மொழிகள் - 52

ஜகத்குரு


சமய நூல்களில் கூறப்பட்டவைகளை உங்கள் கருத்துக்கேற்ப திரிக்காதீர்கள்.  அவைகளை சரியாகப் புரிந்து கொண்டு, பக்தி சிரத்தையுடனும், நம்பிக்கையுடனும் அதன்படி நடக்கவேண்டும்.  சாஸ்திரங்களில் விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்யுங்கள்.  முடிந்தவரை அல்ல, முழுமையாக சாஸ்திரத்தில் நமக்கு இடப்பட்டவைகள் நம்முடைய சித்தத்தை சுத்தப்படுத்தி பாபங்களைப் போக்கும்.  அவ்வாறு சுத்தப்படுத்தப்பட்ட இருதயத்தில் கடவுள் தோன்றி உயர்ந்த ஆன்மீக அனுபவத்திற்கு வழி காட்டுவார். அந்த நிலையை அடைந்துவிட்டால் எந்த விதமான வித்தியாசங்களும் இல்லை.  
Related Posts with Thumbnails