29 January 2010

தெய்வீகப் பொன்மொழிகள் - 31


பிறருக்கு உதவி செய்வதால், சேவை செய்வதால் அல்லது ஸ்வாமிக்கு பூஜை செய்வதால் ஒவ்வொருவருக்கும் உள்ளுக்குள்ளே ஒரு நிறைவு ஏற்படுகிறது. நாம் செய்யும் சேவையில் மற்றவர்களூக்கு உண்மையான லாபம் இருந்தாலும் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். ஆனால், அதைச் செய்யும்போது நமக்கே திருப்தியும், அமைதியும் உண்டாகின்றன. பிறருக்கு உபகாரமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் தனக்கே உபகாரமாக இருக்கிறது. நம்முடைய மனநிறைவுக்காகவே நாம் பிறரிடம் அன்பு காட்டுகிறோம் என்பது யக்ஞவல்க்ய மகரிஷி உபநிஷத் மூலம் அளிக்கும் போதனை.

05 January 2010

தெய்வீகப் பொன்மொழிகள் - 30




மகாபாரதத்தில் என்ன இருக்கிறது? பொறுமையின் வடிவமாக தருமபுத்திரர் இருக்கிறார். சத்தியமான பிரதிஞை என்பதற்கு பீஷ்மர் இருக்கிறார். தானத்துக்கு கர்ணன், கண்ணியத்துக்கு அர்ஜுனன். இதுபோல் இராமாயணத்தில் சகல தர்மங்களின் மூர்த்தியாக ஸ்ரீராமர் இருக்கிறார்.



பெண்களுடைய உத்தமமான தர்மத்திற்கு சீதை இருக்கிறாள். இராமனுக்கு நேர் விரோதியான இராவணனுக்கு மனைவியாக இருக்கும் மண்டோதரியும், சீதைக்குக் குறைவில்லாத மகாபதிவிரதையாக இருக்கிறாள். இராமாயண, பாரத கதைகளைக் கேட்கும்போது இத்தகைய உத்தம ஆத்மாக்களின் ஞாபகம் வருகிறது.

தெய்வீகப் பொன்மொழிகள் - 29




வேத அத்யயனம், மோகம், தியானம், பூஜை இவற்றைக் கஷ்டப்பட்டு அப்பியாசம் செய்வதால் கிடைக்கும் ஈசுவராநுபவத்தை தெய்வீகமான சங்கீதத்தின் மூலம், நல்ல ராக, தாள ஞானத்தின் மூலம் சுலபமாகப் பெற்றுவிடலாம். இப்படி தர்ம சாஸ்திரம் என்னும் ஸ்மிருதியைத் தந்திருக்கும் யாக்ஞவல்க்ய மகரிஷியே சொல்லியிருக்கிறார். வீணா கானத்தை அவர் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார். கடுமையான பிரயாசை இல்லாமலே சங்கீதத்தால் மோக்ஷமார்க்கத்தில் போய்விடலாம் என்கிறார்.
Related Posts with Thumbnails