18 September 2009

தெய்வீகப் பொன்மொழிகள் - 10

மனுஷனாகப் பிறந்த ஒவ்வொருவனும் ஓயாமல் அலைச்சலான அலைச்சல் அலைந்து கொண்டு இருக்கிறான். எதற்காக ? ஆசைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்குத்தான்.

வெளியிலிருக்கும் வஸ்துக்களிடம் இவனுக்கு ஆசை; ஒன்று கிடைத்துவிட்டால் அது போதவில்லை. அதனால், வரும் சுகம் தீர்ந்து போகிறது. மற்றொன்றுக்கு ஆசைப்படுகிறான். அதைத்தேடி ஓடுகிறான். இவனுக்கு சாந்தி என்பதே ஒரு நாளும் இல்லாமலிருக்கிறது.

தெய்வீகப் பொன்மொழிகள் - 9

ஒருவருக்குச் சொந்தமாக கொஞ்சம் நிலம் இருக்கிறதென்று வைத்துக் கொள்வோம். அதில் வருஷத்திற்க்கு வருஷம் விளைச்சல் அதிகமாகிறது. "இந்த வயல் என்னுடையது" என்பதால் விளைச்சல் அதிகமாகும்போதெல்லாம் அவருக்கு மனம் குளிர்கிறது. ஆனந்தம் உண்டாகிறது. பிறகு விளைச்சல் குறைய தொடங்குகிறது. வயலை
வேறு ஒருவருக்கு விற்று விடுகிறார். மறுபடியும் அதே நிலத்தில் விளைச்சல் கூடுகிறது. இப்போது அதைப் பார்க்கும்போது அவருடைய மனம் குளிரவா செய்கிறது?
"அட டா, போன வருஷம் நம்மிடம் இருக்கிறபோது
நிலம் தரிசு போல் பொட்டலாக இருந்தது, இப்போது எவனோ ஒருவனுக்கு அதிர்ஷ்டம் அடிக்கிறதே"
என்று
வயிற்றெரிச்சல்தான் உண்டாகிறது.

"எனது" என்ற சம்பந்தம் இருந்த மட்டும்தான், அமோக விளைச்சலால் சந்தோஷம் ஏற்பட்டது. பிறகு அதே விளைச்சலில் உணர்ச்சி அடியோடு மாறிவிட்டது.

08 September 2009

தெய்வீகப் பொன்மொழிகள் - 8

பைத்தியம் பிடித்த ஒருவனிடம் " இந்தத் தடியை கால்மணிநேரம் பிடித்துக் கொண்டே இரு" என்றால் அவனால் முடியாது. நம்மால் அவ்வாறு செய்ய முடிகிறது. ஆனால், "ஒரு பொருளை மட்டும் குறிப்பிட்ட நேரம் வரை
நினைத்துக் கொண்டு இரு" என்றால் நம்மால் செய்ய முடியவில்லை. சித்தம் மறுகணமே ஆயிரக்கணக்கான எண்ணங்களை சினிமாப்படங்கள் ஓடுவது போல் ஓட்டமாக ஒடியபடி நினைக்கிறது. ஆகையால், நாம் எவ்வாறு
பைத்தியங்களைப் பற்றி நினைக்கிறோமோ, அதுபோல், மகான்களுக்கு நாம் பைத்தியமாகத்தான் படுவோம்.

05 September 2009

தெய்வீகப் பொன்மொழிகள் - 7

அகண்டமாக இருப்பவன் ஒருவனே உண்மை.  கண்டமாக இருப்பது வெறும் நினைவுதான்.  நினைவு, கனவு எல்லாம் சாசுவத உண்மை அல்ல.

தெய்வீகப் பொன்மொழிகள் - 6

நாம் கண்ணால் மட்டுமே பார்க்கிறொம். ஒன்றை ரோஜா என்கிறோம், மற்றொன்றை ஊமத்தை என்கிறோம். ஞானம் என்ற அறிவால் பார்த்தால் அது ரோஜா அன்று. ஆனந்த மாகத்தான் தெரியும். ஊமத்தம் பூவும் அவ்வாறே தெரியும்.


நமக்கு ஞானம் இல்லாதபடியால், அவைகளை வெவ்வேறாகப் பார்க்கிறோம். உண்மை நமக்கு புலப்படாததற்குக் காரணம் நமக்கு சித்தத்தில் அழுக்கு இருப்பதே.

தெய்வீகப் பொன்மொழிகள் - 5


சக்தியும் பொருளும் ஒன்றே என்று பெரிய உண்மையைக் கண்டுபிடித்த விஞ்ஞானிகள் அந்த அறிவைக்கொண்டு அணுகுண்டு தயாரிப்பைக் கண்டு பிடித்தார்கள் என்பது வருத்தமாக இருக்கிறது. வெளி உலக வஸ்துக்களைக் குறித்து விஞ்ஞானத்தால் நிலை நாட்டப்படும் அத்வைதம், புத்தி அளவில் நின்றதன் விபரீத விளைவுதான் இது.விஞ்ஞானத்தின் அத்வைதம் வெறும் அறிவோடும், வெளி உலகத்தோடும் நிற்காமல் மக்களின் பாவனையிலும் தோயவேண்டும்.

தெய்வீகப் பொன்மொழிகள் - 4


நாம் செய்யும் கருமம் எப்படிப் பாபமாகிறது என்றால் " நமக்காக" என்று ஆசைவாய்ப்பட்டு ஏதோ ஒரு லட்சியத்தைப் பிடிக்கிறபோது தான், இந்த லட்சியப் பூர்த்திக்காக எவ்வித தவறையும் செய்யத்துணிகிறோம்.

அதனால், சித்தத்தில்  வெறுப்பு, மனப்பான்மை, துக்கம், பயம், இத்தகைய அழுக்குகளை ஏற்றிக்கொண்டு விடுகிறோம்.

தெய்வீகப் பொன்மொழிகள் - 3

"தனக்கு" என்கிற பெரிய அரிப்பு இல்லாமல், அசூயை, வஞ்சனை எதுவுமே இல்லாமல் காரியம் செய்கிற போதுதான், அக்காரியத்தில் முழு ஈடுபாடு உண்டாகிறது.

04 September 2009

தெய்வீகப் பொன்மொழிகள் - 2


"பாப சிந்தனைகளைப் போக்குற புண்ணிய சிந்தனைதான் பரோபகாரம். சேவை மனப்பான்மை,

தியாகம் எல்லாம். இதைப் பொதுவாக அன்பு என்று சொல்லலாம்".

தெய்வீகப் பொன்மொழிகள் - 1


"புண்ய கர்மா என்றால் என்ன? அவரவருக்கும் வேதம் விதித்த கர்மம்தான். லோக வாழ்க்கை சீராக நடக்க வேண்டும். அறிவினால் நடக்கிற காரியம், ராஜாங்க ரீதியில் நடக்கிற காரியம்., சரீர உழைப்பினால் நடக்கிற காரியம் எல்லாம் ஒன்றுக்கொன்று முரண்பாடில்லாமல் அனுசரணையாக நடந்தால்தான் சமூக வாழ்கை சீராக இருக்கும்".
Related Posts with Thumbnails